இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். நடிகர்கள், இயக்குனர்கள் ,நடிகர்கள் முடிவு.

sarathkumarதமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக இயக்குனர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சங்கமும் கலந்துகொள்ளும் என நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தமிழக மீனவர்கள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதை கொச்சைப்படுத்தி கேலிப்படமும், அவதூறு செய்தியும் கடந்த வெள்ளியன்று இலங்கையின் பாதுகாப்பு துறை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியானது. இதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பியதால் பின்னர் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது. ஆயினும் தமிழக மக்கள் இந்த பிரச்சனையை விடுவதாக இல்லை. ராஜபக்சே கொடும்பாவியை ஆங்காங்கே எரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரை கொச்சைப்படுத்திய இலங்கை அரசினை கண்டித்து திரையுலகமும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முன்வந்துள்ளது. இன்று இயக்குனர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ,

‘‘தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்வையும், பாதுகாத்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாக சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது. எல்லா பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு, தற்போது நிபந்தனை அற்ற மன்னிப்பு என்ற போர்வைக்குள் மறைந்து கொள்ள முயற்சிக்கிறது.

இலங்கை அரசு தற்போது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் உரிமை மற்றும் வாழ்க்கை ஆகியவற்றை பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து போராடும் போதெல்லாம் அதை குற்றம் சாட்டுவதையோ, கேவலப்படுத்துவதையோ அல்லது கொச்சைப்படுத்துவதையோ வழக்கமாக கொண்டுள்ளது.

தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிப்பதோடு, தமிழக முதல்-அமைச்சரையும் கொச்சைப்படுத்தி வரும் இலங்கை அரசின் ஒட்டுவாலாக விளங்கும் இலங்கை துணை தூதரகம், தமிழ்நாட்டுக்கு தேவையற்ற ஒன்றாகும்.

இந்த துணை தூதரகத்தை உடனடியாக மூடக்கோரி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து இலங்கை துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்று கூறியுள்ளது. நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், ‘இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக நடிகர் நடிகையர் கலந்துகொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply