கருணாநிதி வீட்டின் முன் போராட்டம் செய்த திமுகவினர். பரபரப்பு தகவல்
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி நேற்று முன் தினம் இரவு வெளியிட்டார். இந்த பட்டியல் பல திமுக சீனியர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. வேட்பாளர் பட்டியல் முழுக்க முழுக்க ஸ்டாலின் ஆலோசனையின் தயாரிக்கப்பட்டதாகவும் கருணாநிதி, கனிமொழி பரிந்துரை செய்த பலருக்கு சீட் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மைதீன்கானை மாற்றக்கோரி பாளையங்கோட்டையில் அவரது உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தியிருந்தனர்.
அடுத்த கட்டமாக நெல்லை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான திமுகவினர், சென்னை வந்து கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு திரண்டு பாளையங்கோட்டை வேட்பாளரை மாற்றும்படி கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மைதீன்கானுக்கு எதிரான முழக்கங்களை அவர்கள் எழுப்பியதால் கோபாலபுரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.