சென்னை ஐஐடி மாணவர்களின் அமைப்பு ஒன்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் இன்று திடீரென மறியலில் ஈடுபட்ட பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சென்டர் (ஏபிஎஸ்சி) என்ற அமைப்பினை நடத்தி வருகின்றனர்.இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் மத்திய அரசின் கொள்கைகளை அவதூறாக விமர்சித்தும், பிரதமர் மோடி மற்றும் இந்து மதத்தினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், எனவே இந்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு புகார் சென்றது.
இந்த புகார் குறித்து விசாரணை செய்யுமாறு சென்னை ஐ.ஐ.டி தலைமைக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி தலைவர், ஏபிஎஸ்சி அமைப்புக்கு தடை விதித்துள்ளார்.
இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை சென்னை ஐஐடி எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் புரட்சிக்கர மாணவர் இளைஞர் முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் வேனில் ஏற்றினர்.
இதே பிரச்னைக்காக சென்னை சாஸ்திரிபவன் முன்பு காங்கிரஸ் கட்சியின் ஆதிதிராவிடர் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளதால் போராட்டம் மேலும் வலுவடைந்து வருகிறது.