கற்பனை செய்துபாருங்கள்… புற்றுநோய் செல்களைக் கொல்லும் மிகப்பெரிய இயந்திரம் ஒன்று, புற்றுநோய்க் கட்டிகளை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறது. இதனால், புற்றுநோய் கட்டியைச் சுற்றியுள்ள உள்ள நல்ல செல்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைந்து பக்கவிளைவும் குறைகிறது என்றால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு நவீன தொழில்நுட்பம்தான் புரோட்டான் தெரப்பி. இன்னும் சில மாதங்களில் தெற்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது இந்த அதிநவீன தொழில்நுட்பம்.
புற்றுநோய் செல்களை அழிக்க, பல ஆண்டுகளாக கதிர்வீச்சு சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சிகிச்சையின்போது, புற்றுநோய் செல்களை அதைச் சுற்றியுள்ள நல்ல செல்களும் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. மேலும், அந்தப் பகுதியில் மீண்டும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் மிகமிக அதிகம். நவீனக் கண்டுபிடிப்புகள் இந்தப் பாதிப்பு அளவைக் குறைத்துக்கொண்டே வருகின்றன. இதன் மைல்கல்தான் புரோட்டான் தெரப்பி. ஐ.பி.ஏவும் பிலிப்ஸ் ஹெல்த் கேர் நிறுவனமும் இணைந்து இந்த இயந்திரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றன.
“அமெரிக்கா உள்ளிட்ட வெகு சில நாடுகளில் மட்டுமே இருக்கும் இந்த தெரப்பி, முதன் முதலில் இந்தியாவுக்கு வந்துள்ளது” என்கிறார், ஐ.பி.ஏ தலைமை செயல் அலுவலர் ஆலிவர் லெக்ரைன்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் தி.ராஜா, “பொதுவாக, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், எளிதில் குணப்படுத்திவிடலாம். அறுவைசிகிச்சை, கதிரியக்கம், கீமோதெரப்பி என மூன்று வழிகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற்றுநோயின் தன்மை, நிலைமையைப் பொறுத்தும், என்ன மாதிரியான புற்றுநோய் என்பதைப் பொறுத்துமே சிகிச்சை முடிவு செய்யப்படும்.
ஆரம்ப காலத்தில், புற்றுநோயாளிக்கு கதிரியக்கம் கொடுக்கும்போது, எந்த இடத்தில் புற்றுநோய் வந்ததோ, அந்தப் பகுதியை அப்படியே நீக்கிவிட்டனர். அதன் பிறகு, புற்றுநோய் கட்டி இருந்த இடத்தை சுற்றி, ஒரு டார்கெட் வைத்து கதிரியக்கம் செலுத்தி, கட்டிகள் அழிக்கப்பட்டன. இந்த முறையில், புற்றுநோய் பாதிப்பு இல்லாத செல்களும் பாதிக்கப்பட்டன. மீண்டும் புற்றுநோய் வரும் அபாயமும் இருந்தது. அதன் பிறகு, அந்த டார்கெட் அளவைக் குறுக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. முடிந்தவரை புற்றுநோய் கட்டிகளைத் தவிர, மற்ற செல்கள் பாதிக்கப்படாதாவாறு சிகிச்சை அளிக்கவே மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் முயல்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத் தான் புரோட்டான் தெரப்பி வந்துள்ளது.
புரோட்டான் தொழில்நுட்பம் அதிக வலிமை கொண்டது. புற்றுநோய் கட்டியின் டி.என்.ஏ (புளுபிரிண்ட்) வரை சென்று தாக்கி அழிக்கிறது. மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களைத் தவிர மற்ற செல்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்படாது என்பதால், மீண்டும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.
வெகுசில நாடுகளில் மட்டுமே இருந்த இந்தத் தொழில்நுட்பம், சென்னைக்கு வந்துள்ளது. ஆனால், இந்த தெரப்பியை எல்லாவிதமான புற்றுநோய்களுக்கும் பயன்படுத்த முடியாது. மிக நுண்ணிய இடத்தில் கதிர்வீச்சு செலுத்த வேண்டியிருக்கும் சிலவகைப் புற்றுநோய்களுக்கு மட்டுமே கொடுக்க இயலும். மிக முக்கியமாக, ஆண்களுக்கு வரும் பிராஸ்டேட் புற்றுநோய், கண் விழிக்கோளத்தில் வரும் புற்றுநோய் (Ocular cancer), சார்கொமாஸ் வகை புற்றுநோய், குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய் போன்றவற்றுக்கு புரோட்டான் தெரப்பி பயன்படுத்தப்படும். குழந்தைகளுக்குப் புற்றுநோய் சிகிச்சை அளித்து குணமானாலும் கதிர்வீச்சு காரணமாக மற்ற பகுதிகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆனால், புரோட்டான் தெரப்பியில் இந்தப் பாதிப்பு குறைவு. சாதாரணமாக வந்து சிகிச்சை எடுத்துச் செல்லலாம். இந்த சிகிச்சையின் மூலம், மிகச்சிறந்த வாழ்க்கைத்தரத்தை நோயாளிகள் நிச்சயம் பெற முடியும்.” என்றார்.
புரோட்டான் தெரப்பியின் செயல்பாடு!
தற்போதைய கதிரியக்க சிகிச்சையில் போட்டான்கள் (Photons) பயன்படுத்தப்படுகின்றன. நவீன புரோட்டான் தெரப்பியில், போட்டான்களுக்குப் பதிலாக புரோட்டான்கள் பயன்படுத்தப்படும். மிகப்பெரும் வலிமைகொண்ட இந்த புரோட்டான்கள், ஹைட்ரஜன் அணுவில் இருந்து பிரிக்கப்பட்டு, சைக்ளோட்ரான் எனும் கருவியின் வழியாக, அதிவேகமாகச் சுழற்றப்படும். பிறகு, அயனிக்கற்றை அறை (Beam room) வழியாக செலுத்தப்பட்டு, புற்றுநோய் கட்டியின் வடிவத்துக்கு ஏற்றவாறு கேன்ட்ரி அறையில் (Gantry Room) மாற்றியமைக்கப்படும். அடுத்து, நாசில் வழியாக நோயாளியின் உடலில் புற்றுநோய் செல்கள் இருக்கும் இடத்தின் மேல் செலுத்தப்பட்டு, அந்த செல்களை மட்டும் குறிவைத்து அழிக்கும்.