மருத்துவமனைக்கு தொண்டர்கள் வரவேண்டாம். திமுக தலைமை அறிவிப்பு
திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று காலை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பரவ ஆரம்பித்ததும் திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன் குவிய ஆரம்பித்துள்ளனர். இதனால் திமுக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தலைவர் கலைஞர் அவர்கள் ‘ஒவ்வாமை’க்காக சிகிச்சை பெற்று, ஓய்வு எடுத்துவந்த நிலையில் தொடர்ந்து மேலும் சில பரிசோதனைகளும், அதன் தொடர்பான சிகிச்சைகளும் பெற வேண்டியிருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று (01.12.2016) அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் ஒரு சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருப்பதால், தலைவர் கலைஞர் அவர்களைப் பார்க்க கழகத் தோழர்களும், நண்பர்களும், பார்வையாளர்களும் நேரில் வராமல் அன்புகூர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு தலைமைக்கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.