நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும். வங்கி ஊழியர்கள் அறிவிப்பு.

bank strikeமத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி முடிந்ததால் நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனால் வங்கிகள் இயங்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. வேலை நிறுத்தத்தை முறியடிக்க மத்திய அரசு வங்கி ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு  டெல்லிக்கு அழைத்தது.

இதன்படி, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் ஆலோசகர் மித்ரா அவர்களுடன் 12 வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள்  நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எற்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம் மற்றும் எல்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறும்போது, நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.) ஏற்கனவே அறிவித்த 11 சதவீதத்திலேயே பிடிவாதமாக இருந்தன.

வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்த 25 சதவீதத்தில் இருந்து 23 சதவீதத்துக்கு இறங்கி வந்தோம். ஆனால், அந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதனால்,  ஏற்கனவே அறிவித்தபடி வருகின்ற 12 ஆம் தேதி (நாளை) நாடு முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். மேலும், டிசம்பர் 2 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் தேதி வரை பிராந்திய அளவில் அனைத்து வங்கி ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்” என்றனர்.

Leave a Reply