[carousel ids=”67164,67165,67166,67167,67168,67169″]
பொதுமக்களுக்கு குடியிருக்கும் பகுதியில் உள்ள சாராயக்கடையை அகற்றும்படி பலமுறை அரசை வலியுறுத்தியும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள், சாராயக் கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் ஒன்று புதுச்சேரி நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி – வழுதாவூர் சாலையில் கவுண்டம்பாளையம் என்ற பகுதியில் 6ஆம் எண் சாராயக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகே குடியிருப்பு பகுதி இருப்பதால் சாராயக்கடையில் குடிக்க வருபவர்களால் அடிக்கடி இந்த பகுதி மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டு வந்தது. எனவே இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை பத்து மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் மகளிரணியைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு திடீரென சாராயக்கடையில் நுழைந்தனர்.
பின்னர் அங்கிருந்த சாராய கேன்கள், பாட்டில்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கிய பெண்கள் சில நிமிடங்களில் கடையையே நாசம் செய்துவிட்டனர். . இந்த திடீர் தாக்குதலால் சாராயக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாராயக் கடையில் சாராயம் குடித்துக் கொண்டிருந்த குடிமகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்த சாராயக்கடையை அடித்து நொறுக்கிய பெண்களில் ஒருவர் கூறியபோது, “ஒவ்வொரு வருடமும் கலால்துறையால் புதுச்சேரியில் உள்ள அனைத்து சாராயக்கடைகளும் ஏலம் விடப்படும். இந்த சாராயக்கடை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இங்கு எதுவும் வீடுகளும் இல்லை. இந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசலும் இல்லை. ஆனால் இப்போது இந்தக் கடையில் அருகிலேயே பள்ளி, மருத்துவமனைகள் உட்பட ஏராளமான குடியிருப்புகளும் வந்துவிட்டது. இதனால் இங்கு குடித்துவிட்டு வரும் நபர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
குடித்துவிட்டு கண்மண் தெரியாமல் கடையில் இருந்து வேகமாக இருசக்கர வெளியில் வரும்போது மற்றவர்களும் விபத்துக்குள்ளாகிறார்கள். வாரத்திற்கு ஒருவர் இங்கு விபத்தில் இறக்கிறார்கள். நிறையபேர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருக்கிறது. இங்கு வந்த பெண்களில் பலபேர் இந்தக் கடையில் குடித்து இறந்து போனவர்களின் மனைவிகள்தான். அதுமட்டுமல்லாமல் இந்தக் கடையின் வாசலில் இருக்கும் வாய்க்காலிலேயே குடித்துவிட்டு வந்து விழுந்து இறந்து விடுகிறார்கள். நான்கு நாட்கள் கழித்து நாறிப்போய்தான் அவர்களை வெளியே எடுக்க வேண்டியிருக்கிறது.
உண்ணாவிரதம், முற்றுகை, கையெழுத்து, அரசிடம் மனு என அனைத்து வகையிலும் அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு இந்தக் கடையை இடமாற்றம் செய்ய சொன்னோம். புதுச்சேரியின் அனைத்துக் கடைகளும் ஏலம் சென்றுவிட்ட நிலையில் எங்களின் தொடர் போராட்டத்தால் இந்தக் கடையை மட்டும் யாரும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. ஆனால் இவ்வளவுப் போராட்டம் செய்தும் அந்தக் கடையை மீண்டும் மீண்டும் மறு ஏலம் செய்வதிலேயே அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி இன்றும் இந்தக் கடைக்கு ஏலத்தை அறிவித்திருந்தது. அதனால்தான் பாதிக்கப்பட்ட பெண்களாகிய நாங்களே களத்தில் இறங்கிவிட்டோம்” என்று கூறினர்.