புதுவை முதல்வர் போட்டியிடும் தொகுதி எது? புதிய தகவல்
சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு புதுவை முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடாததால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவர் பதவி ஏற்ற 6 மாதங்களில் இடைதேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
இந்த நிலையில் நாராயணசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்று 3 மாதங்கள் முடிவடைந்து உள்ளது. இன்னும் 3 மாதத்திற்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வேண்டும்.
இந்நிலையில் நாராயணசாமி போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் பதவி விலகுவார் என்றும் அங்கு நாராயணசாமி போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ பதவிக்கு பதிலாக ஜான்குமாருக்கு வேறு முக்கிய பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.
புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளையும், தி.மு.க 2 தொகுதிகளையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.