டெல்லி கவர்னர் அதிகாரம் குறித்த தீர்ப்பு. புதுவையை பாதிக்குமா?
டெல்லியில் முதல்வரை விட கவர்னருக்கே அதிக அதிகாரம் என்று நேற்று டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பு நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே டெல்லியை போல யூனியன் பிரதேசங்களாக இருக்கும் புதுவை உள்பட மற்ற யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கும் இதே நிலைதான் என்று கருதப்படுகிறது.
குறித்து புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘டெல்லிக்கும், புதுச்சேரி நிர்வாகத்துக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. புதுவையை பொறுத்தவரை காவல்துறை, நிலம், அரசு நிர்வாகம் ஆகியவற்றில் அரசுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் டெல்லி யூனியன் பிரதேச சட்டங்கள் வேறு, புதுவை யூனியன் பிரதேச சட்டங்கள் வேறு. தற்போது டெல்லி ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. அதனை படித்துவிட்டு பின்னர் அதுபற்றி கருத்து தெரிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக டெல்லி ஐகோர்ட் தனது தீர்ப்பில், ‘கவர்னரே நிர்வாக தலைவராக இருப்பார் என்றும் டெல்லி அமைச்சரவையின் முடிவுகள் கவர்னரை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும், அமைச்சரவையின் யோசனையை கவர்னர் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் தீர்ப்பு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..