காலையில் கட்சியில் சேர்ந்தவர் மாலையில் எம்.பி.வேட்பாளர். அதிமுக அதிரடி
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கோகுலகிருஷ்ணன் என்ற தொழிலதிபர் இன்று காலையில்தான் கட்சியில் சேர்ந்தார். காலையில் கட்சியில் சேர்ந்தவர் மாலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் செய்துவிட்டார். இவருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் ஆதரவு கொடுத்துவிட்டதால் இவரது வெற்றியும் உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் நடைபெற்ற இந்த அதிரடி நிகழ்ச்சி புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
தற்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் கண்ணனின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியுடன் முடிவடைவதால் புதிய மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு 21 ஆம் தேதி கடைசி நாள். 28 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் அப்போதே எண்ணப்பட்டு 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இந்த தேர்தலில் முதல்வர் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துள்ளது. புதுச்சேரியின் பிரபல தொழிலதிபர் கோகுல கிருஷ்ணன் இன்று அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட்டு எம்.பி. தேர்தல் வேட்பாளராகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, கோகுலகிருஷ்ணன் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து முதல்வர் ரெங்கசாமி கூறியபோது ”அ.தி.மு.க. வேட்பாளர் கோகுலகிருஷ்ணனுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும். அவர் புதுச்சேரிக்கு தேவையான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவார்” என்றார். அதிமுக வேட்பாளரை தவிர மனுதாக்கல் செய்துள்ள மீதி இரண்டு நபர்களும் சுயேட்சை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோகுலகிருஷ்ணன், எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.