கொறித்து உண்ணும் பருப்பு வகைகளில் பூசணிக்காய் விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்களும், நோய் எதிர்ப்பு பொருட்களும் அதில் அடங்கி உள்ளன. பூசணிக்காய் விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் பருப்பில் 559 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
பூசணி விதையில் அதிக அளவு புரதமும், கொழுப்பும் காணப்படுகிறது. இதிலுள்ள ஆலியிக் அமிலம் எனப்படும் கொழுப்பு அமிலம், கெட்ட கொழுப்பான எல்.டி.எல். கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பான எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உடையது. இதய பாதிப்புகளில் ஒன்றான கரோனரி தமனி பாதிப்பு மற்றும் முடக்குவாதம் போன்றவற்றில் இருந்து தடுப்பு ஆற்றல் வழங்குவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. 100 கிராம் பருப்பில் 30 கிராம் புரதச்சத்து உள்ளது.
இது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய புரத அளவில் 54 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் டிரிப்டோபான் மற்றும் குளுட்டா மேட் போன்ற அமினோ அமிலங்களும் உள்ளன. டிரிப்டோபான் அமினோ அமிலமானது சிரோடானின் மற்றும் நியாசினாக மாறி உடற்செயல்களில் பங்கெடுக்கிறது. சிரோடானின் என்பது நரம்பு செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அமிலமாகும். தூக்கத்தை தூண்டும் ஆற்றல் இதற்கு உண்டு. குளுட்டாமேட் அமினோ அமிலமானது நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானதாகும்.
மூளையின் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் இந்த அமிலம், மனஅழுத்தம் ஏற்படாமல் காக்கவல்லது. கவலை மற்றும் பல்வேறு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-இ, அதிக அளவில் காணப்படுகிறது. 100 கிராம் பருப்பில் 35.10 மில்லிகிராம் வைட்டமின்-இ காணப்படுகிறது.
இது பிரீரேடிக்கல்களால் ஏற்படும் சருமபாதிப்புகளை தடுக்கிறது. தயாமின், ரிபோபிளேவின், நியாசின், பான்டொதெனிக் அமிலம் மற்றும் பைரிடாக்சின், போலேட் போன்ற பி-குழும வைட்டமின்களும் சிறந்த அளவில் காணப்படுகின்றன. இவை பல்வேறு நொதிகளின் செயல்பாட்டிற்கும், உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவும் துணைக் காரணிகளாகும். நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கும் ஆற்றல் உடையது.
தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலினியம் போன்ற அடிப்படை தாது உப்புக்களும் பூசணி விதையில் கணிசமாக உள்ளது. குறிப்பாக 100 கிராம் பருப்பில் 4 ஆயிரத்து 543 மில்லிகிராம் அளவு மாங்கனீசு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மாங்கனீசு நோய் எதிர்ப்பு சுரப்பிகளை நன்கு செயல்படத்தூண்டும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களை உடலில் இருந்து அகற்றும் ஆற்றலும் பூசணி விதைகளுக்கு உள்ளது. எனவே நொறுக்குத் தீனி பிரியர்கள் பூசணி விதைகளை வறுத்து கொறிக்கலாம்.