கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போரூர் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் புனே நகரில் புதிதாக கட்டப்பட்ட 7 அடுக்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
புனே அருகே உள்ள பும்கர் மலா என்ற இடத்தில் புதிதாக 7 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று கட்டப்பட்டு அதன் சில பகுதிகளில் பொதுமக்கள் குடிவந்துள்ளனர். இந்த கட்டிடம் திடீரென இன்று காலை இடிந்து விழுந்தது.
இந்தவிபத்து குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியபோது, ”இந்த கட்டடத்தின் சில பகுதியில் திடீரென வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. அது பற்றி வீட்டின் உரிமையாளர்கள் கட்டடத்தை கட்டிய பில்டரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த பில்டர் விரிசல் பற்றி கவலை அடைய தேவையில்லை. கட்டடம் உறுதியாக தான் இருக்கிறது என்று கூறினார். ஆனால் இன்று அதிகாலை நாங்கள் அச்சப்பட்டது போலவே இந்த கட்டடம் திடீரென ஆட ஆரம்பித்து விழுந்துள்ளது. கட்டட இடிபாடுக்குள் பலர் சிக்கி உள்ளனர். அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை” என்று கூறினார்.
இந்த விபத்து குறித்து போலீசார் கூறும்போது, ”இந்த கட்டடம் இன்று காலை 3 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த அடுக்கு மாடி கட்டடத்த்தில் மொத்தம் 8 குடும்பங்கள் கடந்த ஒருவருடமாக வசித்து வந்துள்ளனர். இந்த கட்டட இடிபாடுக்குள் பலர் சிக்கி உள்ளனர். தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.