ஐ.பி.எல் 7 கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று துபாயில் நடந்த விறுவிறுப்பான போட்டி ஒன்றில் பஞ்சாப் அணி பெங்களூர் அணியை பந்தாடியது. அந்த அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகள் பெற்று முதலிடத்தில் இருக்கின்றது.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, முதல் ஓவரிலே 20 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. பெங்களூர் அணியின் கெய்லே இரண்டு பவுண்டரிகளும் இரண்டு சிக்சர்களும் அடித்து அசத்தலான ஆரம்பத்தை கொடுத்தார். ஆனால் இரண்டாவது ஓவரிலேயே கெய்லே மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அதன்பின்னர் வந்த பெங்களூர் அணியின் வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். யுவராஜ்சிங் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்தது.
125 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழந்து 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய பஞ்சாப் அணியின் சந்தீப் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தொடர் வெற்றியாகவும், பெங்களூர் அணிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாகவும் அமைந்தது.