ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம். இது பஞ்சாப் துணை முதல்வரின் ஆவேசம்
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் கர்நாடக மாநிலம் இழுத்தடித்து கொண்டு வரும் நிலையில் அண்டை மாநிலங்களுக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட தரமுடியாது என பஞ்சாப் மாநிலத் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். அவர் ஹரியானா மாநிலத்தையே மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பஞ்சாபில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநிலத் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலிடம் செய்தியாளர்கள் ஹரியானாவுக்கு தண்ணீர் தருவது குறித்து கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, ‘பஞ்சாப் முழுக்க முழுக்க வேளாண் தொழிலைச் சார்ந்த மாநிலமாகும். அப்படியிருக்கும்போது, பஞ்சாபில் உள்ள நீரை எவ்வாறு நாங்கள் பிற மாநிலங்களுக்கு வழங்க முடியும்.
பஞ்சாபில் உள்ள நீர் வளங்களைப் பாதுகாக்கவும், இங்குள்ள மக்களின் நலனைக் காக்கவும் சிரோமணி அகாலி தள அரசு உறுதிபூண்டுள்ளது.
எனவே, பஞ்சாபிலிருந்து ஹரியாணாவுக்கு தண்ணீர் வழங்க வகை செய்யும் சட்லஜ் – யமுனா இணைப்பு ஏரிப் பாசனத் திட்டத்தை எந்த நிலையிலும் நாங்கள் நிறைவேற்ற மாட்டோம். பஞ்சாபிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று சுக்பீர் சிங் பாதல் கூறினார்..