புறம்போக்கு என்கிற பொதுவுடமை. திரை விமர்சனம்

purampokkuரயில் கடத்தல், ராணுவத்தை தாக்குதல் போன்ற குற்றங்களுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்படும் ஆர்யா, அவரை தூக்கில் போடும் வரை பாதுகாக்க வேண்டிய சிறை அதிகாரியாக ஷாம், ஆர்யாவை தூக்கில் போடும் ஹேங்மேனாக விஜய் சேதுபதி இவர்கள் மூவருக்குள் நடைபெறும் சம்பவங்கள்தான் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம்.

எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டும் குப்பைத்தொட்டியாக இந்தியாவை எல்லா நாடுகளும் பயன்படுத்துகின்றன என்பதில் தொடங்கிய இந்த படத்தின் கதை, அதன்பின்னர் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு திசை மாறுகிறது. ஆர்யாவை தூக்கில் போடும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் சிறை அதிகாரியாக வரும் ஷாம், இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரை புரிந்து அற்புதமாக நடித்துள்ளார். டெல்லியில் இருந்து தூக்கு தண்டனை கைதியை கொண்டு வருவதில் இருந்து, சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது வரை இவரது கேரக்டர் கச்சிதமாக அமைந்துள்ளது. தூக்கு போடுவதற்கு சிலமணி நேரம் முன்பு அவர் ஆர்யாவிடம் பேசும் வசனத்தின்போது அவரது நடிப்பு அபாரம்.

ஜாலியான, ஆர்ப்பாட்டமான ஆர்யாவை இதுவரை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் வித்தியாசமாக அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான ஆர்யாவை பார்க்கலாம். ஆங்காங்கே கம்யூனிச கொள்கைகளை வசனங்கள் பேசுகிறார். இவர் தீவிரவாதியா? அல்லது போராளியா? என்று காண்பிப்பதில் இயக்குனர் குழப்பம் அடைந்துள்ளார்.

நிரபராதியை தூக்கில் போட்ட அதிர்ச்சியில் இனிமேல் இந்த தொழிலே வேண்டாம் என எந்நேரமும் பாட்டிலும் கையுமாக இருக்கும் விஜய்சேதுபதி, ஆர்யாவை தூக்கில் போட ஷாம் அழைத்தபோது முதலில் மறுப்பதும் பின்னர் கட்டாயத்தின் பேரில் அதை ஒப்புக்கொள்வதுமான கேரக்டரில் நடித்துள்ளார். கார்த்திகா கம்யுனிசவாதியா? அல்லது தீவிரவாதியா? என்பதிலும் குழப்பம். எந்த கம்யூனிஸ்ட்வாதி துப்பாக்கியை எடுத்து கொலை செய்துள்ளார்கள் என்பதை எஸ்.பி.ஜனநாதனிடம்தான் கேட்க வேண்டும். கார்த்திகா இந்த படத்தில் பைக் ஓட்டுகிறார், பனிமலையில் ஆர்யாவுடன் சேர்ந்து மனித வெடிகுண்டாக மாறுகிறார். இருப்பினும் கார்த்திகாவுக்கு இந்த கேரக்டர் சுத்தமாக பொருந்தவில்லை.

ஆர்யாவை சிறையில் இருந்து தப்பிக்க வைக்க சக கைதிகள் செய்யும் ஐடியாக்கள் சூப்பர். பாதாள சாக்கடை மூலம் வந்து தூக்கு போடும் கடைசி நிமிடத்தில் ஆர்யாவை காப்பற்ற கார்த்திகாவும் விஜய் சேதுபதியும் போடும் பிளானும் அருமை.

ஜெயில் காட்சிகள் இந்தளவுக்கு வேறு எந்த தமிழ் படத்திலாவது வந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். கலை இயக்குனர் சூப்பராக ஜெயில் செட்டை போட்டுள்ளார். இந்த படத்தில் வரும் மூன்று பாடல்களும் வேஸ்ட். ஆனால் பின்னணி இசையில், இது ஸ்ரீகாந்த் தேவாதானா என்று ஆச்சரியப்பட வைக்கின்றார். ஹாலிவுட் பட பாணியில் பின்னணி இசை அமைந்துள்ளது படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ்.

பேராண்மை படத்தில் ஒரு தேசபக்தனின் பார்வையில் படம் முழுவதிலும் பயணம் செய்த எஸ்.பி.ஜனநாதன், இந்த படத்தை அதற்கு நேர்மாறாக தீவிரவாதியின் கண்ணோட்டத்தில் எடுத்துள்ளார். ஆனாலும் சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்லும் காட்சி அமைப்புகள் இல்லை. ஜெயில் கேமராவை கண்காணிப்பவர் செக்ஸில் வீக்காக இருப்பதும், தூக்கில் கைதி தொங்கும் இடத்தை ஷாம் ஒருமுறை கூட சென்று செக் பண்ணாமல் இருப்பதும், கம்ப்யூட்டர் என்றால் என்ன என்றே தெரியாத விஜய் சேதிபதி சரியாக மானிட்டரில் கனெக்ஷன் கொடுப்பதும் கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை.

படத்தின் ஒரே ஒரு ஆறுதல். யாருமே எதிர்பாராத கிளைமாக்ஸை கொடுத்ததுதான். சத்தியமாக பத்து சதவீத ஆடியன்ஸ்கள் கூட இந்த முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

புறம்போக்கு,  புரட்சி இல்லாவிட்டாலும் போரடிக்கவில்லை.

Leave a Reply