புதினா – காலிஃப்ளவர் மஞ்சூரியன்

புதினா – காலிஃப்ளவர்  மஞ்சூரியன்
puthina califlower manjuriyan
தேவையானவை: நல்ல வெண்மையாக இருக்கும் காலிஃப்ளவர் – ஒன்று, புதினா – 2 கட்டு, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், சோள மாவு – 2 டீஸ்பூன், மைதா – முக்கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, சீரகம் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சின்னச் சின்ன பூக்களாக எடுத்து… சிறிதளவு உப்பு கலந்த நீரில் போட்டு, 10 நிமிடம் வேகவைத்து நீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி – பூண்டு விழுது, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கொஞ்சம் உப்பு, தேவையான நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கலந்துகொள்ளவும். வேகவைத்த காலிஃப்ளவர் பூக்களை ஒவ்வொன்றாக இந்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், காய்ந்த மிளகாயை லேசாக வறுக்கவும். பொடிப் பொடியாக நறுக்கிய புதினா, பொரித்த காலிஃப்ளவர் பூக்கள் சேர்த்துக் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து வறுத்த காலிஃப்ளவர் மீது புதினா நன்றாக சேரும்படி கிளறவும். நீர் நன்கு வற்றிய பின் இறக்கவும்.

இது… சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும். சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

Leave a Reply