அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தை அடுத்து ரஷ்யாவின் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் உள்பட பலரின் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும் உத்தரவில் அதிபர் புதின் நேற்று கையெழுத்திட்டார்.
ஐரோப்பிய நாடுகள் விதித்த தடையை அடுத்து ரஷிய கரன்சியான ரூபிள் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. எனவே அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதும் ரஷியாவின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாகும் என கூறப்படுகிறது.
இதையடுத்து, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சம்பளக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிரடியாக ரஷ்ய அரசு எடுத்து வருகிறது.
அதிபர், பிரதமர் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் மாத சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டு இதற்கான உத்தரவில் புதின் கையெழுத்திட்டார். இதன்படி, இம்மாதத்திலிருந்து டிசம்பர் வரை மாத சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது.
அதிபர் புதின், பிரதமர் மெட்வடேவ், புலானாய்வுக் குழுத் தலைவர் அலெக்ஸாண்டர் பாஸ்டிரிகின், தலைமை வழக்குரைஞர் யூரி சைக்கா ஆகியோரின் ஊதியம் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. இது தவிர அமைச்சர்களின் ஊதியமும் குறைக்கப்படுகிறது.