குர்ஆன் வாசித்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம். இந்தோனேஷியா எண்ணெய் நிறுவனம் அறிவிப்பு
தற்போது இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்தோனேசியா நாட்டின் அரசுக்கு சொந்தமான பெர்டா மினா என்ற எண்ணெய் நிறுவனம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தற்போது புனித ரமலான் மாதத்தில் குர்ஆன் படிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று நாடு முழுவதிலும் போஸ்டர் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்து இந்தோனேஷியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஏராளமான வாகன ஓட்டிகள் நீண்ட கியூ வரிசையில் நிற்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை அறைக்கு சென்று புனித குர்ஆன் புத்தகத்தில் ஒரு பகுதியை படித்து விட்டு 2 லிட்டர் பெட்ரோலை பெற்று செல்கின்றனர்.
ரமலான் மாதம் முழுவதும் குர்ஆன் வாசிப்பதன் மூலம் முழு நூலையும் படித்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் வாகனங்களில் இலவசமாக பெட்ரோல் நிரப்ப முடிகிறது என்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 25 கோடி மக்கள் தொகையுள்ள இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.