ரூ. 3 கோடி நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்

தமிழக அரசிடம் விடுத்த ஒரே ஒரு வேண்டுகோள்

சமீபத்தில் கொரோனா தடுப்பு நிதியாக ரூ.3 கோடி நிதியுதவி செய்த நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கொரோனா” தடுப்பு நடவடிக்கையில் மாண்புமிகு தமிழக முதல்வர்‌ திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின்‌ தலைமையிலான தமிழக அரசு மிகவும்‌ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்‌! அதே சமயம் இந்த “கொரோனா” ஊரடங்கினால்‌ சரிவர உணவுப்‌ பொருட்கள்‌ கிடைக்காமல்‌ பாதிக்கப்பட்டூள்ள மக்களுக்கு இனி தன்னார்வலர்களோ, தனி நபர்களோ உணவுப்‌ பொருட்கள்‌ எதையும்‌ வழங்க கூடாது!” என்று தடை விதிக்கப்பட்டுள்ளது!

இந்த தடை உத்தரவை தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மிகவும்‌ பணிவுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌! அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும்‌ விரைவாக உணவுப்‌ பொருட்களை
தந்திட இயலாது என்பதே எதார்த்தம்‌! அவ்வகையில்‌ ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் எனும்‌ நல்லெண்ணத்திலேயே, நான்‌ கடந்த வாரம்‌ “கொரோனா” தடுப்பு நிவாரண நிதியை அளித்தக்‌ கையோடு அடுத்தகட்டமாக, வருகிற 14 ஆம்‌ தேதி தமிழ்ப்புத்தாண்டு முதல்‌, நானும்‌ எனது நண்பர்களும்‌, தமிழக அரசுடன்‌ இணைந்து, ஏழை எளிய மக்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ சில சேவை திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறோம்‌!

இந்நிலையில்‌ தான்‌ நமது தமிழக அரசின்‌ இந்த தடை உத்தரவு என்‌ போன்ற தன்னார்வலர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது! நமது அரசு வேண்டுமானால்‌ இப்படி செய்யலாம்‌ தன்னார்வலர்கள்மக்களுக்கு பொருட்களை வழங்குகிற நடைமுறையில்‌ இன்னும்‌ கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதனை போலிசாரின்‌ துணையோடு கடைப்பிடிக்குமாறு உத்தரவிடலாம்‌! நம்மைப்‌ பொறுத்தவரை, “கொரோனா”” நோய்‌ தொற்று விஷயத்தில்‌ தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து நடவடிக்கைகளும்‌ அருமை! அற்புதம்‌! அதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்‌!

அதே நேரம் காய்கறி பழங்களை இலவசமாக கொடுக்கக்‌ கூட மனமில்லாமல்‌ குப்பையில்‌ கொட்டுகிறவர்கள்‌ இருக்கிற இதே நாட்டில்தான்‌, அன்பை அளவில்லாமல்‌ கொட்டுகிற தன்னார்வலர்களும்‌ இருக்கவே செய்கிறார்கள். தன்னார்வலர்கள்‌ நேரடியாக உதவக்‌ கூடாது” என்கிற உத்தரவை மட்டும்‌ மறுபரிசீலனை செய்யுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களை மிக பணிவன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌!

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply