அனைத்து கட்சிகளும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார். ஆம் ஆத்மியின் எழுச்சி காரணமாகவே, லோக்பால் மசோதா கொண்டு வரப்படுவதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.
மேல்மட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வகைசெய்யும் லோக்பால் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது, நாளை விவாதம் நடைபெறுகிறது. சமாஜ்வாடி கட்சியின் எதிர்ப்பால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவருடன், மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கபில் சிபல், நாராயணசாமி ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
அப்போது, ராகுல் காந்தி கூறியதாவது-
ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு மிகமிக வலிமையான ஆயுதம், லோக்பால். இது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டு நலனுக்கு உகந்தது. ஊழலை ஒடுக்க ஒரு வழிமுறை வேண்டும் என்று நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நேரத்தில், லோக்பால் மசோதா வந்துள்ளது. நாங்கள் அந்த மசோதாவை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம். ஆனால், பாராளுமன்றம் முடக்கப்பட்டு விட்டது.
நாங்கள் 99 சதவீத பணிகளை முடித்து விட்டோம். மீதி ஒரு சதவீதத்தை அனைத்து கட்சிகளும் செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்க வேண்டும். அப்படி செய்தால், நாட்டுக்கு லோக்பால் சட்டத்தை வழங்கி விடுவோம். எனவே, அனைத்து கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து மசோதாவை ஆதரிக்க வேண்டும்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ‘ஆம் ஆத்மி’ கட்சி பெற்ற வெற்றி மற்றும் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் காரணமாக, லோக்பால் மசோதாவை நாங்கள் கொண்டு வந்ததாக கூறப்படுவது தவறு. இது, வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. நாங்கள் முன்பே ‘தகவல் அறியும் உரிமை’ சட்டத்தை கொண்டு வந்தோம். அது, ஊழல் ஒழிப்பில் வலிமையான ஒற்றை ஆயுதம்.
அதன்பிறகு, சிறிது காலமாக, லோக்பால் மசோதாவுக்காக பணியாற்றி வந்தோம். அன்னா ஹசாரேவை பொறுத்தவரை, அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அது, அவரது பார்வை. எங்களைப் பொறுத்தவரை, ஊழல் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.