பருப்பு விலை குறையும் தேதி எது? ராகுல்காந்தியின் கேள்விக்கு அருண்ஜெட்லி பதிலடி
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று மக்களவையில் மிகவும் ஆவேசமாக பிரதமர் மோடி குறித்தும் நாட்டில் விலைவாசி உயர்ந்து வருவதை இந்த அரசு கட்டுப்படுத்த தவறியது குறித்தும் பேசினார். குறிப்பாக பருப்பு விலை மிகவும் உயர்ந்துள்ளதால் சாமானியர்கள் மிகவும் கஷ்டப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
பருப்புவிலையை குறைப்போம் என்று கூறி ஆட்சியை பிடித்த மோடி, ஆட்சிக்கு வந்த பின்னர் அதை கவனிக்காமல் விட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர் பருப்பு விலை குறையும் நாள் எது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, “பருப்பு விலை உயர்வை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. பருப்பு தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் கொள்கை முடிவுகளை சார்ந்துதான் பருப்பு வகைகளின் விலை குறையுமே தவிர, அதற்கான தேதியை குறிப்பிட்டு குறைக்க இயலாது என்று கூறினார்.
மேலும் விலைவாசி என்பது புள்ளி விவரங்களைச் சார்ந்தது; வசனங்களைச் சார்ந்தது அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தபோது மத்திய அரசின் நிலை மிகவும் மோசமானதாக இருந்தது. அத்துடன், தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் பணவீக்கத்தை குறைப்பதாக வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி அளிப்பது இயற்கையானதுதான். இதற்கு யார் ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்’ என்றும் அருண்ஜெட்லி கூறினார்.