அசாம் கோவிலில் நுழைய ராகுல்காந்திக்கு ஆர்.எஸ்.எஸ் தடையா?
கேரளாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதல்வர் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் ‘தன்னை கோயில் ஒன்றினுள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தடுத்ததாக ராகுல் காந்தி திடீரென பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். இதனால் பரபரப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
இன்று பாராளுமன்ற வளாகத்தின் வெளியே நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி “நான் அசாம் சென்றிருந்தபோது அங்குள்ள பார்பீதா கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. கோயில் வாயில் அருகே பெண் காவலரை நிறுத்தி என்னை தடுத்து நிறுத்த ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் உத்தரவிட்டிருந்தனர். அதன் பின்னர் மாலை நேரத்தில் அந்த நபர்கள் புறப்பட்ட பின் நான் அந்த கோயிலுக்கு சென்று வந்தேன்.
இந்த நிலையில்தான் பாஜக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது இதற்கு மேலான காரியத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என்று கூறி வாக்களித்த மக்களையே மத்திய அரசு தாழ்த்திவிட்டது” என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டை அசாம் முதல்வர் தருண் கோகாயும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.