ஜெயலலிதா மட்டும்தான் உலகிலேயே அறிவாளியா? ராகுல்காந்தி அனல்பேச்சு
பாரத பிரதமர் நரேந்திரமோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துபோன நிலையில் நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். சோனியா காந்தி போலவே அதிமுகவை கடுமையாக விமர்சித்த ராகுல்காந்தி, ஜெயலலிதாவையும் தனிப்பட்ட முறையில் தாக்க தவறவில்லை.
மதுரையில் நேற்றைய பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கூறியதாவது: ”தமிழக முதல்வர் ஜெயலலிதா யாரையும் சந்திப்பது இல்லை. நல்ல தலைவர்கள் மக்களுடன் கலந்து இருப்பார்கள். எதிர்க்கட்சிகளை நசுக்குகின்ற கட்சியாக ஆளுங்கட்சி இருக்கக் கூடாது. உலகிலேயே தான் மட்டுமே அறிவாளி என ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும்தான் அறிவாளியா?
நாட்டிலேயே தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்திருக்க வேண்டும். முன்பெல்லாம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் வந்தார்கள். ஆனால், தற்போது அவர்கள் வருவதில்லை. நிலமற்ற விவசாயிகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்திலுள்ள பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். அனைத்து அரசு பணியிடங்களும் நிரப்பப்படும். நாட்டிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவோம். ஒரே நோக்கத்துக்காக தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுகிறோம்”
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
Chennai Today News: Rahul Gandhi condemned to Jayalalitha