கோட்-சூட் அணிந்தவர்களை மட்டுமே சந்திக்கிறார் பிரதமர். ராகுல்காந்தி குற்றச்சாட்டு
ஏழை, எளிய மக்களிடம் குறைகளை கேட்காமல், கோட் சூட் அணிந்தவர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை மட்டுமே பிரதமர் கேட்கிறார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்
பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. தற்போது பீகாரில் சுற்றுப்பயணம் செய்துவரும் ராகுல்காந்தி நேற்று நடைபெற்ற ஒரு பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த போது, கொண்டு வந்த நல்ல பல திட்டங்களை மோடி அரசு முடக்கி விட்டது. தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார் மோடி. பிரதமராக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார் மோடி.
2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றார். ஆனால் அந்த வாக்குறுதி என்னாச்சு? கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் பணம் ரூ.15 லட்சம் டிபாசிட் செய்யப்படும் என்றார் நிறைவேற்றினாரா? மோடி மீண்டும் மீண்டும் தவறான பிரசாரங்களை செய்து வருவதன் மூலம் ஏழை மக்களை மோடி ஏமாற்றப்பார்க்கிறார்.
ஒருபுறம் மகாத்மா காந்தி, ஏழைகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பணியாற்றுவதற்காக தனது விலைமதிப்புள்ள ஆடையை துறந்து வேட்டி கட்டிக் கொண்டு போராட்டத்தில் இறங்கினார். ஆனால், மறுபுறம் தேநீர் விற்பவராக தனது வாழ்க்கையை தொடங்கியதாகவும், கைத்தறி ஆடைகளை அணியுங்கள் என வேண்டுகோள் விடுக்கும் மோடி. ரூ.15 லட்சம் மதிப்பிலான கோட்-சூட் அணிகிறார்.
பிரதமர் மோடி கோட்- சூட் அணிந்தவர்களையே சந்திக்கிறார். ஏழை மக்களை சந்திக்காமல் புறக்கணிக்கிறார். ஏழை மக்களை சந்திக்க அவருக்கு நேரமில்லை. மத்தியில் பகட்டு ஆட்சிதான் நடக்கிறது.
மோடி, ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உயர்ந்து விட்டது. ஊழலில் தொடர்புடைய லலித்மோடி மீது இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஊழலில் தொடர்புடைய சுஷ்மா போன்றவர்களை இந்த பகட்டு ஆட்சி காப்பாற்றி வருகிறது.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.