பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று ஒரு ஆண்டு பூர்த்தியாக இருக்கின்றது. இந்த நேரத்தில் ஓராண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருக்கும் நிலையில் மோடியின் ஓராண்டு ஆட்சிக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பூஜ்ஜியம் மார்க் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது சொந்த தொகுதியான அமேதியில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல்காந்தி, ஜகதீஷ் பூரில் உணவுப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்துக்கு சென்று அங்கு விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது, ‘உணவுப் பூங்கா ரத்து செய்யப்பட்டதால் அமேதி மற்றும் அதையொட்டியுள்ள 10 மாவட்டங்களின் விவசாயிகளும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
என்னை நேரடியாக பழிவாங்க முடியாத மத்திய அரசு இந்த நடவடிக்கையின் மூலம் பழிவாங்கியுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்களின் விவகாரங்களை கையாளுவதில் இந்த அரசுக்கு நான் 10-க்கு பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே தருவேன் என்று கூறினார். மேலும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதில் காட்டும் ஆர்வத்தை பிரதமர் மோடி உள்நாட்டு விவசாயிகள், தொழிலாளர் நலனில் காட்டுவதில்லை’ என்று கூறினார்.