கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி மோடி தலைமையிலான பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மற்றவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கின்றது என்று குற்றம் சாட்டியிருந்தார். ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு நேற்று பதிலளித்த மத்திய கப்பல்-போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சிக்க ராகுல் காந்திக்கு தகுதியில்லை’ என்று கூறியுள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றபோது அதில் கலந்து கொள்ளாமல், யாரிடமும் சொல்லாமல் 55 நாள்கள் எங்கோ சென்ற ராகுல்காந்திக்கு ஆர்எஸ்எஸ் குறித்து விமர்சிக்கத் தகுதியில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து விமர்சிக்க முதலில் அவர் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு விருப்பம் இருந்தால் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பை நேரில் சென்று பார்க்கலாம். சீருடை அணிந்து அணி வகுப்பிலும் கலந்துகொள்ளலாம். ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் கலந்துரையாடி, அவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அதன்பின்னர் விமர்சனம் செய்யட்டும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பொருளாதார பாடம் கேட்டறிந்துள்ளார் என்று ராகுல் காந்தி கூறியதற்கு பதிலளித்த போது, “பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று தேசத் தலைவர்களைச் சந்தித்து, அங்குள்ள சூழல்களை ஆராய்ந்து, அதன் மூலமாக நமது நாட்டுக்கு என்ன செய்ய இயலும் என்ற வகையில் செயல்பட்டு வரும் மோடி, மாதம் ஒரு ஊழல் என்ற வகையில் ஆட்சி செய்த மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை என்றார்.