கிழக்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக தங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கடந்த 2ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் அவர்களுடன் சாலையில் உட்கார்ந்து போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துப்புரவு தொழிலாளர்களுடன் இணைந்து ராகுல்காந்தி ஆம் ஆத்மி மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். ராகுல்காந்தி இந்த போராட்டத்தில் திடீரென கலந்து கொண்டதால் உற்சாகமான துப்புரவு தொழிலாளர்கள் ஆவேசத்துடன் பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
போராட்டத்தின் இடையே பேசிய ராகுல் காந்தி, “அரசிடம் கோரிக்கை விடுப்பதனால் எந்தப் பலனும் இல்லை. அவர்களுக்கு நமது வலிமையைக் காட்ட வேண்டும். உங்களுடன் நான் தற்போது மட்டுமல்ல, 10 மணி நேரத்துக்கு கூட தர்ணாவில் ஈடுபட தயாராக உள்ளேன்” என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த போராட்டம் குறித்து கருத்து கூறிய டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய அவர்கள் ‘இது வெறும் அரசியல் விளையாட்டு என்று கூறினார்.