“ராகுல் காந்தியை காணவில்லை” போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய அமேதி தொகுதி மக்கள்.

rahul gandhiகாங்கிரஸ் துணைத் தலைவரும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தியைக் காணவில்லை’ என உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பே கடந்த மாதம் ஒரு வார விடுமுறை என அறிவித்து சென்ற ராகுல் காந்தி ஒரு மாதம் ஆகியும் திரும்பி வரவில்லை. அவர் தற்போது எங்கிருக்கின்றார் என்ற விபரத்தையும் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தெரிவிக்கவில்லை. ராகுல் காந்தி தனது விடுமுறையை நீடித்துள்ளார் என்று மட்டுமே கூறி வருகிறது.

இந்நிலையில், ‘காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைக் காணவில்லை’ என்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் நேற்று சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அலகாபாத், புலந்த்ஷாகர் ஆகிய மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், ‘நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் முக்கிய நேரத்தில், ராகுல் விடுப்பில் செல்ல முடிவெடுத்தது, அவருக்கு நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களை பற்றியும் கவலையில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு சுவரொட்டியில், ‘நீங்கள் எங்கே சென்றிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு தகவலும் இல்லை, ஒரு கடிதமும் இல்லை., எங்கே போனீர்கள்?’ இப்படிக்கு அமேதி மக்களவைத் தொகுதி பொதுமக்கள் என்று உள்ளது.

உ.பி.யில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளுக்கு மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சுவரொட்டிகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ அவர்கள் கூறும்போது, “இது பாஜகவின் வேலைதான். தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று அமேதி தொகுதி மக்கள் நினைக்கின்றனர். தங்கள் தொகுதிதான் மிகவும் சிறந்தது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அமேதி தொகுதியில் ஏற்பட்டுள்ள முழு வளர்ச்சியும் ராகுல் காந்தியின் யோசனைப்படிதான் நடந்தது. ஆனால், காணவில்லை சுவரொட்டி மூலம் அவதூறு பரப்ப பாஜக முயற்சிக்கிறது. ராகுலுக்கு எதிராக அவதூறு பரப்ப சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. அதை நாங்கள் எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்போம்” என்றார்.

Leave a Reply