துணிச்சல் இருந்தால் வழக்கு போட்டு பாருங்கள்: ராகுல்காந்தி சவால்

துணிச்சல் இருந்தால் வழக்கு போட்டு பாருங்கள்: ராகுல்காந்தி சவால்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்தே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பை அதிகப்படுத்தியிருக்கும் ராகுல்காந்தி, மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்று பேசியது குறித்து துணிச்சல் இருந்தால் வழக்கு போட்டு பாருங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தி கொலை குறித்த வழக்கு ஒன்றில் ஆஜரான ராகுல்காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘என்னுடைய போராட்டம், மோதல் அனைத்தும் பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிராகத்தான். பிரதமர் மோடி விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும், நாட்டில் இளைஞர்கள் இடையே அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் பேச மறுக்கிறார். ஆனால், குறிப்பிட்ட சில பணக்காரர்களுக்காகக் கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு. ஆனால், விவசாயிகளுக்குக் கடனும், கடன் தள்ளுபடியும் அளிக்க மறுக்கிறது.

வானொலியில் மான்கிபாத் (மனதில் இருந்து பேசுகிறேன்) என்று பேசும் பிரதமர் மோடி,(காம் கி பாத்) இளைஞர்களின் வேலைவாய்ப்பு, விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்துப் பேசாமல் மவுனமாக இருக்கிறார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் துணிவிருந்தால், எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் என் மீது போடட்டும். அத்தனை வழக்குகளிலும் சட்டப் போராட்டம் நடத்தி, பொய் வழக்குகள் என நிரூபித்து விடுதலையாவேன்.” என்று ஆவேசமாக கூறினார்.

Leave a Reply