கடந்த இரண்டு மாத காலமாக அரசியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு தாயார் சோனியா காந்தியின் அனுமதியோடு விடுமுறைக்கு சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று காலை 11 மணிக்கு டெல்லி வந்திறங்கினார். அவரது வருகையால் அவரை குறித்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ராகுல்காந்தியின் திடீர் தலைமறைவு வாழ்க்கை குறித்து பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியினர் இதற்கு பதில்கூற முடியாமல் திணறிய நிலையில் ராகுல் காந்தி காணவில்லை என்று போஸ்டர் அடித்து உத்தரபிரதேச பாஜகவினர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பாங்காங்கில் இருந்து டில்லி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் டெல்லி வந்திறங்கி தன்னைப் பற்றிய வதந்தி பரப்பியவர்களின் வாயை அடைத்தார்.
இந்நிலையில் ராகுல்காந்திக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், அவர் மீண்டும் இந்தியா திரும்பும்போது மனைவியுடன் தான் வருவார் என்பதற்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது. ராகுல் காந்தி தனியாகத்தான் விமானத்தில் இருந்து இறங்கி வந்தார்.
ராகுல் காந்தியின் வருகை காங்கிரஸ் கட்சியினர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர் மிக விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்க உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.