அரசியல் மாற்றம் செய்வதாக பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த பிரதமர் நரேந்திர மோடி, பழிவாங்கும் அரசியலில் தீவிரம் காட்டுவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று மக்களவையில் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆளும் கட்சியை மக்களவையில் வறுத்தெடுத்த நிலையில் நேற்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதி பிரச்சாரத்திற்காக வந்திருந்த பிரதமர் மோடி 52 நிமிடம் பேசினார். அப்போது மாற்றத்திற்கான அரசியலை தான் தரப்போவதாக உறுதி அளித்தார். ஆனால் தற்போது அவர் தனது வாக்குறுதியை மீறியதோடு மட்டுமின்றி பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிரார். மோடியின் பேச்சை நம்பி பொதுமக்கள் மட்டுமின்றி நானும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன்.
காங்கிரஸ் ஆட்சியின் போது அமேதி தொகுதியில் உணவு பூங்கா அமைக்க அனுமதி அளிக்கபட்டிருந்தது. தற்போது மோடி அரசு அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டது. இதனால் அமேதி மக்கள் மோடி அரசு மீது கடும் கோபம் அடைந்துள்ளனர் என்று கூறிய ராகுல் காந்தி அமேதி தொகுதியில் உணவு பூங்கா அமைக்க மத்திய அசு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் கூறிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “நாங்கள் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடவில்லை என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். முன்னேற்றத்தை அரசாங்கத்தால் மட்டும் உறுதி செய்ய முடியாது. அமேதி தொகுதியில் உணவு பூங்கா அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்’ என்றார்.