பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம். ஆனால் ராகுலுக்கோ அயர்ந்த தூக்கம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்.பிக்கள் பலர் ஆக்ரோஷமாக விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தூங்கிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ‘ராகுல்காந்தி தூங்கவில்லை என்றும் அவர் கீழே குனிந்து பார்த்துக்கொண்டிருந்தார் என்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி விளக்கம் அளித்து உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று, காரசாரமான விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த சம்பவத்துக்காக மத்திய அரசை கடுமையாக கண்டித்து பேசினார். இதனால் காங்கிரஸ் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த விவாதமும் மோதலும் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் சமூக இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி உடனடியாக இதற்கு விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், ”விவாதம் நடந்தபோது ராகுல்காந்தி தூங்கவில்லை. உள்துறை அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால், அவர் கீழே பார்த்துக் கொண்டிருந்தார். அவையில் பெரும் அமளி நடந்து கொண்டிருக்கும்போது ஒருவரால் எப்படி தூங்க முடியும். ராகுல்காந்தி அவையில் தூங்கவில்லை. பேசுவதற்கு எத்தனையோ பெரிய விஷயங்கள் இருக்கும்போது, இது முக்கியமான விஷயமா’’ என கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கருத்து தெரிவிக்கையில், “ராகுல் காந்தி தூங்கியது, காங்கிரசின் மனநிலை எத்தகையது என்பதை காட்டுகிறது. அவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையிலும் உண்மையான அக்கறை கிடையாது. காரணம் இல்லாமல் கூச்சல் போட்டு நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றனர். காங்கிரஸ் மூழ்கும் கப்பல். அதனால்தான் அவர்களின் தலைவர் தூங்குகிறார். ஆனால் காங்கிரஸ் இதை மறுக்கிறது. அவர்கள் அனைத்தையும் அரசியல் ஆக்குகின்றனர்” என்று கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறும்போது, ”தலித் மக்கள் குறித்த விவாதத்தின்போது அவையில் ராகுல்காந்தி தூங்குகிறார். இந்த பிரச்னையில் காங்கிரஸ் எந்த அளவிற்கு அக்கறை கொண்டு உள்ளது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது“ என்றார்.