ஆந்திரா நோக்கி நகர்கிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி. தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு
சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் படிப்படியாக மழை குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று ரமணன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: “தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆந்திராவுக்கு நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், அடுத்த தகவல் வரும் வரையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், “கடந்த 2004 முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மழைப் பொழிவு இயல்பை விட அதிகமாகவே இருந்ததாகவும், 2005-ம் ஆண்டில், 79 சதவீதம் மழை அதிகரித்து இருந்ததாகவும். 2012-ல் 16 சதவீதம், 13-ல் 33 சதவீதம் கடந்த ஆண்டில் 2 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்ததாகவும் ரமணன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் தற்போது வரை 34 செ.மீ. மழை கிடைத்துள்ளதாகவும், வரும் நாட்களில் பெய்யக்கூடிய மழையை கணக்கிட்டால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது தெரியவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.