செல்போன் மூலம் ரயில் டிக்கெட். புதிய வசதி நேற்று முதல் அறிமுகம்

செல்போன் மூலம் ரயில் டிக்கெட். புதிய வசதி நேற்று முதல் அறிமுகம்
railway
சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல பயணைகள் மனதளவில் உளைச்சல் ஏற்பட்டு சரியான நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையை தடுக்க செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த புதிய திட்டத்தை நேற்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.

டெல்லி பல்வால் புறநகர் ரயில் பிரிவில், செல்போனில் சாதாரண ரயில் டிக்கெட் பெறும் முறையை ரயில்வே துறை அமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “அடுத்த சில நாட்களில் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளையும், பிளாட்பார டிக்கெட்டுகளையும் காகிதமின்றி பெறுகிற முறை (செல்போன் வழியாக பெறுகிற வசதி) அறிமுகம் செய்யப்படும்.

தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்த மொபைல் அப்ளிகேஷன் முறை காகித உற்பத்தியாளர்களுக்கு வருத்தத்தை தரலாம். ஆனால் நேரத்தை மிச்சப்படுத்துவதால் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் ரொக்கம், ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி டிக்கெட் பெறுகிற வசதி தற்போது டெல்லியில் உள்ளது. பிற இடங்களிலும் இந்த முறை விரைவில் கொண்டு வரப்படும்.

இதன்மூலம் ரூ.5-க்கு அதிகமான பணத்தை செலுத்தி அல்லது ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி முன்பதிவில்லா பயண டிக்கெட்டுகளை பெற முடியும். இது, ரயில்நிலைய கவுன்ட்டர்களில் கூட்ட நெரிசலை குறைக்கும்’ என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply