பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றவுடன் அரசு அதிகாரிகளும், அரசின் முக்கிய துறைகளும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரை பயன்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டி வருகின்றது. இந்நிலையில் இந்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய சமூக வலைத்தளமான டிவிட்டரில் இன்றுமுதல் இணைந்துள்ளது.
டுவிட்டரில் கணக்கு துவங்கிய ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் பாலோயர்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். ரயில்வே அமைச்சர் சதானந்த கௌட, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், அருண் ஜேட்லி, பத்திரிகை தகவல் அலுவலகம் பிஐபி, நரேந்திர மோடி, பிரதமர் அலுவலகம் என 9 பேரைப் பின்தொடரும் இந்த டிவிட்டர் பக்கத்தில், இன்று டிவிட்டர் பக்கத்தின் துவக்க விழா புகைப்படமும் இணைக்கப் பட்டிருந்தது.
ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்த கௌட, இணை அமைச்சர் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புகைப்படமும் அதில் பிரசுரமாகியுள்ளது. மேலும் ரயில்வே அமைச்சர் தாக்கல் செய்யும் ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை இந்த டுவிட்டர் கணக்கில் உடனுக்குடன் பதிவு செய்யப்படும் என்றும் இந்த டுவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்கள் உடனடியாக ரயில்வே பட்ஜெட் குறித்து முக்கிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.