சுவாதி கொலை எதிரொலி. சென்னை ரயில் நிலையங்களுக்கு ரூ. 40 கோடியில் சிசிடிவி கேமரா

சுவாதி கொலை எதிரொலி. சென்னை ரயில் நிலையங்களுக்கு ரூ. 40 கோடியில் சிசிடிவி கேமரா

cctvசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர் படுகொலைக்குப் பின்னர் ரயில் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி வலுவாக எழுந்துள்ளது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயில்களால், ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகின்றன. ‘ஆனால் அதற்கேற்ற வகையில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் கவலைப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருவதால் தற்போது ரெயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது

நுங்கம்பாக்கம் உள்பட சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 80 ரயில் நிலையங்களிலும் ஒவ்வொரு பிளாட்பாரத்திற்கும் 8 கேமராக்கள் வரை பொருத்தப்பட உள்ளதாகவும் இதற்கு செலவாகும் ரூ. 40 கோடியை நிர்பயா நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ.62 கோடியில் இருந்து எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில் நிலைய காவல்நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி இருக்கிறோம். இப்போது வரையில் ஆயிரம் போலீஸார்தான் சென்னை கோட்டத்திற்குட்பட்டு இயங்குகின்றனர். இவர்களால் போதுமான அளவுக்குப் பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்த முடிவதில்லை. நுங்கம்பாக்கம் சம்பவத்தால் ரயில்வே அமைச்சகம் மிகுந்த கவலையில் ஆழ்ந்துவிட்டது. இதையடுத்து, கண்காணிப்பை பலப்படுத்துவது குறித்த ஆய்வு அறிக்கையை எங்களிடம் கேட்டனர். ரயில்நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டிருக்கிறோம்.

அதில், பேசின் பிரிட்ஜ், எழும்பூர், சென்ட்ரல், மாம்பலம், தாம்பரம், மயிலாப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொருத்துவதற்காக 140-க்கும் அதிகமான சி.சி.டி.வி கேமராக்கள் தேவைப்படுகிறது எனத் தெரிவித்திருந்தோம். இதையடுத்து, உடனடியாக 62 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர். சென்னை கோட்டத்திற்குட்பட்ட 80 ரயில்வே ஸ்டேசன்கள் மற்றும் ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் வேலைகள் தொடங்கப்பட உள்ளன. இதுதவிர, குற்றச் செயல்கள் அதிகம் நடக்கும் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை மற்றும் ரயில் நிற்காத ரயில் நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்த இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply