முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;-
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ந்தேதி தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, வங்க கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக நவம்பர் 8-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை பெய்த பெருமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயின. இந்த மாவட்டங்களில் உடனடி நிவாரணம் வழங்கவும், பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளை உடனடியாக சீரமைத்திடவும் அமைச்சர் குழு ஒன்றினையும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நான் அனுப்பிவைத்தேன்.
வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக, வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக மீண்டும் கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த மாவட்டங்களில் மீண்டும் பெருமழை பெய்யத் தொடங்கியது. ஏரிகளின் உபரிநீர்ஒரு சில மணி நேரங்களிலேயே 20 செ.மீ. வரை சில இடங்களில் மழை பெய்தது. மேலும், ஏரிகள் நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 5 ஆயிரம் கனஅடியும், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 25 ஆயிரம் கன அடியும், செங்குன்றம் நீர்த்தேக்கத்திலிருந்து 5,800 கனஅடியும், சோழவரம் நீர்த்தேக்கத்திலிருந்து 400 கனஅடி உபரிநீரும் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படைகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் 50 நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்து 358 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14 லட்சத்து 97 ஆயிரத்து 653 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 146 நிவாரண முகாம்களில் 38 ஆயிரத்து 495 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 லட்சத்து 53 ஆயிரத்து 101 உணவுப்பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
சென்னை மாவட்டத்தில் 97 முகாம்களில் 62 ஆயிரத்து 267 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், 17 லட்சத்து 28 ஆயிரத்து 349 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 முகாம்களில் 57 ஆயிரத்து 516 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 லட்சத்து 17 ஆயிரத்து 333 உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியில் 470 பம்புகள், 75 அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் எந்திரங்கள், 82 ஜே.சி.பி., பொக்லைன்கள் மூலமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையால் முறிந்து விழும் மரங்கள் சிறப்பு குழுக்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்தை சீர்செய்யும் வகையில் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்த இடங்களில் மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில், இப்பகுதிகளில் மின் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழைநீர் வடிந்த பின்னர் மின் வினியோகம் படிப்படியாக சீர் செய்யப்படும்.