வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்துள்ளது. சென்னையின் பல இடங்களில் நேற்று மாலை நல்ல மழை பெய்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி, அடையாறு, வேளச்சேரி, மீனம்பாக்கம், வடபழனி, மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று காலையும் லேசான மழை பெய்தது. மேலும், ஒசூர், திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. இன்று மாலை சென்னையில் நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் சென்னை நுங்கப்பாக்கத்தில் 25.5 மில்லிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 33.3 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.