தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் வாட்டியெடுத்த நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக தமிழகம் எங்கும் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை பகுதியில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக நிலைகொண்டுள்ளதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை முதல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, நாகை, நீலகிரி, குன்னூர், ராமேசுவரம், கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
சென்னையில் இன்று காலை முதல் சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் தூறலும் விழுந்தது. எழும்பூர், கிண்டி, ஆழ்வார்பேட்டை, போரூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஓடியது. மேலும் செங்கல்பட்டு, ஆவடி, திருநின்றவூர், திருமுல்லைவாயல், பூந்தமல்லி, மதுராந்தகம், திருப்போரூர், திருவான்மியூர் பகுதியிலும் நல்ல மழை கொட்டியது. சாலைகளில் மழைநீர் தேங்கியது.
இந்த மழை நாளையும் நீடிக்கும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.