மராட்டிய நவநிர்மாண் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தேர்தல் பிரச்சார பேச்சு ஒன்றில் “இந்த நாட்டில் விவசாயிகளுக்குத்தான் அதிகமாக துரோகம் செய்யப்படுகிறது. விவசாயிகள் பலர் இதனால் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை கொலை செய்யுங்கள். தற்கொலை செய்ய வேண்டாம் எனாவர் பரபரப்பாக பேசியுள்ளதால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம், யாவாத்மால் பகுதியில் போட்டியிடும் மராட்டிய நவநிர்மாண் கட்சி வேட்பாளர் ராஜூ பாட்டீல் ரஜே, அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த கட்சியின் தலைவர் ராஜ தாக்கரே “நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும், அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் போராடி வருகிறோம். பொதுமக்கள் தேர்தலை வெறுக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். நாட்டின் அனைத்து மக்களுக்கும் மதுபானங்களை கொடுக்க தெரிந்த அரசுக்கு, குடிநீரை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஏன் வரவில்லை.
விவசாயிகள் பலர் இந்த நாட்டில் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கின்றனர். இனிமேல் விவசாயிகள் தற்கொலை செய்யவேண்டாம். உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை கொலை செய்யுங்கள், என ஆவேசமாக பேசியுள்ளார். அவருடைய சர்ச்சை பேச்சினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.