இலங்கை ரக்பி விளையாட்டு வீரரின் மரணத்திற்கு ராஜபக்சே மகன் காரணமா?
இலங்கை ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜூதீன் கடந்த 2012ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணம் ஒரு விபத்து என அப்போதைய இலங்கை அரசு வழக்கு பதிவு செய்திருந்தபோதிலும், வாசிம் கொலை செய்யப்பட்டதாகவும், இதில் முன்னாள்அதிபர் ராஜபக்சேவின் 2-வது மகன் யோஷிதாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியானது.
இந்நிலையில் வாசிம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதனால் விரைவில் வாசிம் பிணத்தை தோண்டி எடுக்கவுள்ளதாகவும் இலங்கை காவல்துறை வட்டாரம் கூறியிருந்தது. இதன்படி இன்று ரக்பி விளையாட்டு வீரர் தாஜுதீனின் பிரேதத்தை போலீசார் மீண்டும் தோண்டி எடுத்துள்ளனர்.
வாசிமின் சிதைந்த பாகங்கள் தடயவியல் துறை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பரிசோதனையின் முடிவு வெளிவந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் இலங்கை போலீஸ் துறையின் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னள் அதிபர் ராஜபக்சே கருத்து கூறியபோது, ” இந்த விசாரணையை நான் வரவேற்கிறேன், இதன் மூலம் எங்கள் குடும்பத்துக்கு இதில் தொடர்பு இல்லை என்பது தெளிவாகும். உயர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து என்னை வெளியேற்ற சதி செய்யவே இந்த அரசு இந்த பிரச்சனையை கிளப்பியிருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருகிற 17-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதும் அதில் பிரதமர் பதவிக்கு ராஜபக்சே போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.