இலங்கையில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கான நிதியில் முறைகேடு செய்ததாக, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் தம்பி பசில் ராஜபட்ச புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்ச படுதோல்வியடைந்த பிறகு, அவரது குடும்பத்தில் கைது செய்யப்படும் முதல் பிரமுகர் பசில் ஆவார்.
இவர், ராஜபட்ச தலைமையிலான முந்தைய அரசில், பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதிபரின் ஆலோசகராகவும் இருந்தார்.
தேர்தலில் ராஜபட்ச தோல்விடைந்ததைத் தொடர்ந்து, பசில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், 3 மாதங்களுக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய அவரிடம், இலங்கை காவல் துறையினர் நாள் முழுவதும் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, புதன்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ரூ.7 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பசில், கொழும்பு புறநகரிலுள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ராஜபட்சவின் தோல்விக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் பலர் நிதி முறைகேடுப் புகார் தொடர்பாக விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். அவரது மற்றொரு தம்பியான முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபட்ச, ஊழல் தடுப்பு ஆணையம் முன் வியாழக்கிழமை ஆஜராக இருக்கிறார்.