தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லெட், பிரசாத் ஆகிய 5 மீனவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் தமிழக மீனவர்கள் 5 பேர் உள்ளிட்ட 8 மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன. இதனிடையே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்து இருந்தது. இதற்காக தமிழக அரசு இந்திய தூதரகத்திற்கு ரூ.20 லட்சத்தை அனுப்பி இருந்தது.
இரு தினங்களுக்கு முன், தூக்கு தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனு இந்திய தூதரக அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபரிடம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து 5 தமிழக மீனவர்களின் தூக்குத் தண்டனையை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்து அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு ஏதுவாக இந்திய தூதரகத்தால் இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று வாபஸ் பெறப்பட உள்ளது. இந்த மனு முறையாக திரும்பப் பெறப்பட்ட பின், 5 மீனவர்களுக்கான தண்டனை ரத்து குறித்த அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்புக்கு பின் சில தினங்களில் விடுவிக்கப்படும் மீனவர்கள் நாடு திரும்புவார்கள் என இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பானது தமிழக மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.