இலங்கையில் அதிபர் தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்கள் வாழும் முல்லைத்தீவு பகுதியில் தமிழர்கள் முன்னிலையில் நேற்று உரையாற்றினர். அங்கு அவர் பேசும்போது ‘கடந்த காலத்தை மறந்து விடுங்கள்’, புதிய வாழ்க்கையை தொடங்குவோம்’ என்று கூறியுள்ளார்.
முல்லைத்தீவு பகுதியில் தமிழர்களிடத்தில் அவர் கூட்டம் ஒன்றில் பேசும் போது, “ஈரான், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். அது போன்ற ஒரு சூழ்நிலையை இந்த நாட்டில் நாம் அனுமதிக்க முடியாது. நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், கடந்த காலத்தை மறந்து விடுங்கள், நாம் ஒருங்கிணைந்து இந்த நாட்டை கட்டமைப்போம்.
தமிழர்களின் நலன் குறித்தே பேசிய ராஜபக்சே மறந்தும் கூட விடுதலைப்புலிகளை பற்றி எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவில்தான் கடைசி கட்ட போர் நடந்தபோது ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயினர். அவர்களை தேடும்பணி இன்னும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் என்னதான் ராஜபக்சே தமிழர்களின் பகுதியில் பிரச்சாரம் செய்தாலும் அவரது பிரச்சாரம் எடுபடாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் 15.5 மில்லியன் மக்கள் தொகையில் தமிழர்கள் மக்கள் தொகை 15%. அடுத்த தேர்தலில் அதிபர் யார் என்பதை இந்த விகிதம் நிச்சயம் தீர்மானிக்கும் என்ற நிலையில் ‘கடந்த காலத்தை மறந்து விடுங்கள்’ என்று அவர் பேசியுள்ளார்.