ராஜபக்சே வெற்றி பெற்றாலும் பிரதமராக முடியாதா? இலங்கையில் திடுக்கிடும் திருப்பம்
இலங்கை நாடாளுமன்றத்தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 225 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ள இந்த தேர்தலில் வாக்களிக்க இலங்கை மக்கள் தயார் நிலையில் உள்ளனர். முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கே கொழும்பு மாவட்டத்தில் போட்டியியிடுகிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அதிபரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவருமான மைத்திபால சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு ஒரு கடிதம் எழுத்தியுள்ளார். அதில் ‘‘ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி வெற்றி பெற்றாலும் தங்களை பிரதமராக தேர்வு செய்ய முடியாது. ஏற்கனவே தாங்கள் பிரதமராக இருந்ததால் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுப்போம். தொடர்ந்து அதிபராக இருப்பதற்காக நடவடிக்கை எடுத்தது ஜனநாயக விரோத முறை. இதனால், தங்களை பிரதமராக தேர்வு செய்ய எங்களுக்கு விருப்பமில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ராஜபக்சே பிரதமராக முடியாது எனத் தெரிகிறது. அந்த கட்சியின் பெரும்பாலானோர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது