5 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவு. இன்று நாடு திரும்புகின்றனர்.

five fishermenபோதை மருந்து கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை பெற்ற ஐந்து தமிழர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உத்தரவை அடுத்து தமிழக மீனவர்கள் 5 பேரும் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் ஐவரும் இன்று நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோர் மீது போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றம் கடந்த 30ம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு நேற்று வாபஸ் பெறப்பட்டதை அடுத்து ஐந்து பேர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். இந்த தகவலை  இலங்கை மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 30ஆம் தேதி கொழும்பு உயர் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிபர் ராஜபக்சேவின் உத்தரவை தொடர்ந்து சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டு, கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஐந்து தமிழக மீனவர்களின் விடுதலைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் தேவதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply