மகிந்தா ராஜபக்சேவின் தம்பி உள்ளே. மகன் வெளியே. இலங்கையில் பரபரப்பு
முன்னாள் அதிபர் இலங்கை மகிந்த ராஜபக்சே அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து பல சட்ட நடவடிக்கைகளை சந்தித்து வருகின்றார். மேலும் அவரது குடும்பத்தினர்களும் கைது செய்யப்பட்டு சட்ட சிக்கலில் இருந்து வரும் நிலையில் தற்போது ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்ச 4-வது முறையாக கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இரண்டும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பசில் ராஜபக்ச முதல்முறையாக கைது செய்யப்பட்டார். 2 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் அவர் விடுதலையானார். பின்னர் நில மோசடி தொடர்பாக கடந்த மே 12-ம் தேதி 2-வது முறையாக அவர் கைது செய்யப்பட்டார். எனினும் அன்றைய தினமே ஜாமீனில் விடுதலையானார். பின்னர் மீண்டும் மற்றொரு நில மோசடி தொடர்பாக கடந்த ஜூன் 6-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு அன்றே ஜாமீன் பெற்றார். இந்நிலையில் 4-வது முறையாக அரசு நிதியை தேர்தல் செலவுக்கு முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்பட்டார்.
நிதி மோசடி தொடர்பாக மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் அவரது அரசியல் வாரிசாக கருதப்படும் நாமல் ராஜபக்ச நிதி மோசடி தொடர்பாக கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.