சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே படுதோல்வி அடைந்து பதவியை இழந்ததும் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது குடும்ப உறுப்பினர்களை சிறையில் அடைக்க மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான புதிய அரசு திட்டமிடுவதாக அவர் கூறியுள்ளார்.
தெல்கொட ஸ்ரீ சுதர்மராமய விஹாரை என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ராஜபக்சே “வரும் ஜூலை மாதத்தில் எனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய நிறைவேற்றுப் பேரவையில் இது குறித்து பேசப்பட்டுள்ளதாக எனக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள தேசிய நிறைவேற்றுப் பேரவை யார் வீட்டில் சோதனை நடத்த வேண்டும், யாரை கைது செய்ய வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்கின்றது.
மக்கள் ஒரு நபருக்கு அதிகாரத்தை வழங்கிய போதிலும், இன்று வேறு தரப்பினர் அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். முன்விரோத அரசியலில் ஈடுபடாமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்க புதிய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு ராஜபக்சே பேசியுள்ளார்.