சிங்கள கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். நாளை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜபக்சே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும்போது கடல் எல்லையை தாண்டியதாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் இலங்கை கடற்படையினர்களால் சிறை பிடிக்கபட்ட தமிழக மீனவர்கள் 94 பேர், இலங்கை சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சே சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதற்கான பரிந்துரை கடிதம் ஊர்காவல்துறை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 74 தமிழக மீனவர்கள் மற்றும் அனுராதபுரம் சிறையில் உள்ள 20 மீனவர்கள் ஆகியோர் இன்று அல்லது நாளை விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விசைப்படகுகள் இலங்கையின் பிடியில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.