இலங்கையின் வடக்கு பகுதி விடுதலைப்புலிகள் (எல்.டி.டி.இ) கட்டுப்பாட்டில் இருந்தபோது அப்பகுதி மக்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி பிடுங்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் மற்றும் வைர நகைகளை அதிபர் ராஜபக்ச திரும்ப ஒப்படைத்தார். தேர்தலை முன்னிட்டு ராஜபக்சே இதுமாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் தமிழர்களின் நகைகள் மற்றும் வங்கி டெபாசிட்டுகளை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று இலங்கை அதிபரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக ராஜபக்சே ஒப்படைத்தார். பின்னர் இதுகுறித்து ராஜபக்சே செய்தியாளர்களிடம் பேசியபோது, ” “தங்கத்தை விட விலைமதிப்புள்ள பொருள்கள் அதிகம் வழங்கினேன். விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் தமிழர்களுக்கு சுதந்திரத்தை உறுதி செய்துள்ளேன்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சி குறித்து அதிபர் மாளிகை அதிகாரிகள் கூறும்போது, “மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 1,960 பேர் நகைகளை பெற்றுக்கொண்டனர். இவர்களில் அதிகபட்சமாக கிளிநொச்சியில் இருந்து 1,187 பேர் நகைகளை திரும்பப் பெற்றனர்” என்றார்.
இலங்கையின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த நகைகளுக்கு உண்மையான உரிமையாளர்களை அடையாளம் காணவேண்டியிருந்ததால், சற்று கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ள நேரிட்டது” என்றார்.
இலங்கையில் வரும் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறுபான்மை தமிழர்களின் ஆதரவை பெறும்வகையில் ராஜபக்ச இந்நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது